Nidwalden Tamil Organisation
"NTO App"
அறிவிப்புகளை அனுப்ப விரும்புகிறது
அறிவிப்புகளில் விழிப்பூட்டல்கள், ஒலிகள் மற்றும் ஐகான் பேட்ஜ்கள் இருக்கலாம்.

யாப்பு

நிட்வால்டன் தமிழர் ஒன்றிய நிர்வாகசபையின் அமைப்பு விதிகள்

இந்த யாப்பு இருபத்தொன்பது (29) பிரிவுகளை கொண்டது


01. பெயர்

இச்சபையின் பெயர் நிட்வால்டன் தமிழர் ஒன்றியம் என்பதாகும். இது ஒன்றியம் அல்லது சபை என்று இவ்விதிகளில் குறிப்பிடப்படும்.

இந்த அமைப்பு சுவிஸ் நாட்டின் சட்ட வரைபின் சரத்து 60 மற்றும் அதற்கு பிந்தைய விதிகளுக்கமைவாக நிட்வால்டன் மாநிலத்தில் இயங்கும்.


02. முகவரி

01. Nidwalden, Switzerland

02. தபால் முகவரி
இதற்கென தனியான அலுவலகம் இல்லையெனில், நடப்பாண்டு தலைவர் அல்லது செயலாளரின் வீட்டு முகவரியே தபால் முகவரியாகும்.


03.

ஒன்றியம் சேவை நோக்கம் கொண்ட ஒரு அமைப்பாகும்.


04. கொள்கைகளும் நோக்கங்களும்

  1. நிட்வால்டன் வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் நட்பு உணர்வுகளை ஏற்படுத்துதல்.

  2. தமிழர் கலை, கலாச்சாரம், தமிழ்மொழி மற்றும் கல்வியை வளர்த்தல் மற்றும் சமூக நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவுதல்.

  3. ஈழம், தமிழ் தேசியம், விடுதலைப் போராட்டம், மாவீரர்கள் சார்ந்த வரலாறுகளை பாதுகாத்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல்.


05. அங்கத்தவர்கள்

  1. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட விருப்பமுள்ள அனைவரும் இவ்வமைப்பில் அங்கத்தவர்களாக சேர முடியும்.

  2. வெளிமாநிலங்களில் வசிக்கும் எமது மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் தமிழ் குடியிருப்பாளர்கள் ஒன்றிய யாப்பு விதிகளுக்குட்பட்டு அங்கத்தவர்களாக தொடர முடியும். ஆனால் அவர்கள் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படமுடியாது.

  3. விண்ணப்பப் படிவத்தை நிரப்பி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

  4. நிர்வாகசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை தீர்மானத்தின் மூலம் கௌரவ உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும். அவர்கள் சந்தா செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் ஏன் கௌரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டார் என்பதை பொதுச்சபைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.


06. அங்கத்துவ சந்தா

  1. மாதாந்த சந்தா 5 பிராங்க் (வருடாந்த சந்தா 60 பிராங்க்)

  2. பொதுச்சபை அங்கத்தவர்களாக இருப்பவர்கள் வருடாந்த சந்தாவை பொருளாளரிடம் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வங்கத்துவம் உடையவர்கள் மட்டுமே நிர்வாகசபையில் அங்கம் வகிக்க முடியும்.

  3. வருடாந்த சந்தாவின் பெறுமதி பொதுச்சபையின் 65% அங்கத்தவர்களின் ஆதரவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.


07. நிர்வாக சபை

ஒன்றிய நிர்வாகம் நிட்வால்டன் தமிழர் ஒன்றிய நிர்வாகசபையின் அமைப்பு விதிகளுக்கு அமைவாக, நிட்வால்டன் ஒன்றிய அங்கத்தவர்களால் அவ்வப்போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையின் பொறுப்பில் இருக்கும்.


08. நிர்வாகசபையின் தகுதிகள்

  1. ஒன்றிய வளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு கொண்டவராகவும், 21 வயதிற்கு மேற்பட்டவராகவும் உள்ள உறுப்பினர்களையே நிர்வாகசபைக்கு தெரிவு செய்ய வேண்டும்.

  2. நிர்வாகசபைக்கு தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் கட்டாயமாக பொதுச்சபை அங்கத்தவர்களாக இருக்க வேண்டும் (பிரிவு 06 ஐ பார்க்க).

  3. தமிழை தாய்மொழியாக கொண்டவராகவும் நிர்வாகத்தை வழிநடத்தக்கூடிய அளவிற்கு தமிழ் அறிவு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

  4. நிட்வால்டன் மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.


09. நிதி வருடம்

சபையின் நிதி வருடம் ஆங்கில வருடப்படி தை மாதம் 01ம் திகதி தொடக்கம் மார்கழி மாதம் 31ம் திகதி வரை இருக்கும்.


10. நிர்வாகசபையின் பொறுப்புகளும் கடமைகளும்

  1. நிட்வால்டன் வாழ் தமிழர்களை ஒன்றிணைத்தல்.

  2. ஒன்றியத்தின் பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாத்தல்.

  3. ஒன்றிய வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் உதவுதல்.

  4. இங்கு வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்மொழி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல் மற்றும் சமய அறிவை ஊட்டுதல்.

  5. கல்வி வளர்ச்சிக்காக பிரசங்கங்கள், விவாதங்கள், கட்டுரை போட்டிகள் மற்றும் மாநாடுகளை ஒழுங்கு செய்தல்.

  6. மொழி மற்றும் கலாச்சாரம் சார்ந்த வகுப்புகளை இலவசமாக அல்லது கட்டணத்துடன் (இலாபமின்றி) நடத்துதல்.

  7. மாநிலத்தில் புதிதாக அகதி அனுமதி கோரி வரும் உறவுகளுக்கு தேவையான உதவிகளை வழங்குதல்.

  8. எமது மொழி மற்றும் கலாச்சாரத்தை ஏனைய நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

  9. எமது மொழி மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள ஏனைய நாட்டவர்களையும் அங்கத்தவர்களாக இணைத்தல்.

11. உத்தியோகத்தர்களும் தெரிவுகளும்

01. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை (மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு மேல்) பதவி வகிக்க முடியாது. இந்நிர்வாகசபையில் அங்கத்துவ சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே அங்கம் வகிக்க முடியும்.

02. வருடாந்த பொதுக்கூட்டத்தில் பின்வரும் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

நிர்வாகசபை ஏழு (7) அல்லது ஒன்பது (9) அல்லது பதினொன்று (11) உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

  1. தலைவர்

  2. உப தலைவர்

  3. செயலாளர்

  4. உப செயலாளர்

  5. பொருளாளர்

  6. நிர்வாகசபை உறுப்பினர்கள் (02 அல்லது 04 அல்லது 06)

  7. கணக்கு பரிசோதகர் மற்றும் ஆலோசகர்
    (தேவையெனில் இவர்கள் நிர்வாகசபை உறுப்பினர்களால் அல்லது பொதுச்சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படலாம். இவர்கள் நிர்வாகசபை உறுப்பினர்களாக கருதப்படமாட்டார்கள்.)

  8. ஊடகப் பொறுப்பாளர்
    (செயலாளரே ஊடகப் பொறுப்பாளராக செயற்படுவர்.)

03. நிர்வாகசபை சுமூகமாகவும் தடங்கலின்றியும் இயங்குவதற்காக கடமைகள் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

04. தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நிர்வாகசபை விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படுவேன் என்றும், ஒன்றிய வளர்ச்சிக்காக நேர்மையுடன் உழைப்பேன் என்றும், நிர்வாகசபையின் கூட்டுப் பொறுப்பை மதித்து நடப்பேன் என்றும் உறுதி அளித்து அதற்கான படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.


12. தலைவரின் கடமைகள்

  1. கூட்டங்களை சிறந்த முறையில் தலைமை தாங்கி நடத்துதல்.

  2. நிர்வாகசபையின் செயல்பாடுகளுக்கு பொறுப்பாளராக இருத்தல்.

  3. செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.

  4. ஒன்றியத்தின் பெயரில் வங்கி கணக்குகளைத் திறந்து நிர்வகித்தல்.

  5. மக்கள் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட ஊக்குவித்தல்.

  6. ஒன்றிய வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

  7. ஒன்றியம் சிறப்பாக செயல்பட தேவையான விதிமுறைகளை அமைத்தல்.


13. செயலாளரின் கடமைகள்

  1. நிர்வாகசபை மற்றும் பொதுச்சபை கூட்டங்களின் நிகழ்வுகள் மற்றும் தீர்மானங்களை பதிவுசெய்து பாதுகாத்தல்.

  2. நிர்வாகசபை கூட்டங்களை ஏற்பாடு செய்தல்.

  3. நிர்வாகசபை தீர்மானங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுதல்.

  4. நிர்வாகசபையின் சார்பில் நடைபெறும் அனைத்து கடித தொடர்புகளுக்கும் பொறுப்பேற்று கையொப்பமிடுதல்.

  5. உறுப்பினர் பதிவுகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாத்தல்.

  6. நிர்வாகசபை செலவுகள் 100 பிராங்கை கடந்தால் நிர்வாகசபை அனுமதி பெறுதல்.

  7. அவசியமெனில் ஒரு நாள் முன்னறிவிப்புடன் நிர்வாகசபைக் கூட்டம் நடத்துதல்.

  8. உறுப்பினர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற விவரங்களை பதிவு செய்து பாதுகாத்தல்.


14. பொருளாளரின் கடமைகள்

  1. ஒன்றியத்திற்கான பணம் மற்றும் சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு அதற்கான பற்றுச்சீட்டை வழங்குதல்.

  2. நிர்வாகசபை தீர்மானப்படி செலவுகளை மேற்கொள்ளுதல்.

  3. வரவு செலவு கணக்குகளை முறையாக பதிவு செய்தல்.

  4. தேவையான காலங்களில் வரவு செலவுத் திட்டங்களை தயாரித்தல்.

  5. பணம் மற்றும் பொருட்களுக்கான தனித்தனி பற்றுச்சீட்டுகளை வழங்குதல்.

  6. ஒன்றிய சொத்துகளுக்கான பட்டியலை தயாரித்தல்.

  7. விசேட செலவுகளுக்கு நிர்வாகசபையின் அனுமதி பெறுதல்.


15. உப தலைவர் மற்றும் உப செயலாளரின் கடமைகள்

தலைவர் அல்லது செயலாளர் இல்லாதபோது அவர்களின் கடமைகளை மேற்கொள்வது இவர்களின் பொறுப்பாகும்.


16. ஆண்டு பொதுக்கூட்டம்

  1. நிதி வருட முடிவில் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் ஆண்டு அறிக்கை, கணக்கறிக்கை மற்றும் பிற அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

  2. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகசபை தெரிவு செய்யப்படும்.

  3. பொதுக்கூட்டத் திகதி, நேரம் மற்றும் இடம் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

  4. அவசியமெனில் விசேட பொதுக்கூட்டங்கள் நடத்தலாம்.


17. சபைக்கூட்டங்கள்

  1. நிர்வாகசபை கூட்டம் வருடத்திற்கு குறைந்தது நான்கு முறை நடைபெற வேண்டும்.

  2. பொதுச்சபை கூட்டம் வருடத்திற்கு குறைந்தது ஒரு முறை நடைபெற வேண்டும்.


18. கூட்டங்களுக்கான குறைந்த எண்ணிக்கை

நிர்வாகசபை கூட்டம் நடைபெற குறைந்தது 51% உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்.


19. ஒன்றுகூடல்

  1. ஒன்றுகூடலின் திகதி மற்றும் இடம் நிர்வாகசபையால் தீர்மானிக்கப்படும்.

  2. வரவு செலவுகள் பற்றிய தகவல்கள் ஒரு வாரத்திற்குள் ஒன்றிய இணைய ஊடகங்களில் வெளியிடப்பட வேண்டும்.

  3. நிகழ்வுகளுக்கான கட்டணத்தை நிர்வாகசபை தீர்மானிக்கும்.


20. நிதி கட்டுப்பாடு

  1. 100 பிராங்குக்கு மேற்பட்ட செலவுகளுக்கு நிர்வாகசபை அனுமதி பெற வேண்டும்.

  2. அவசர தேவைகளுக்காக பொருளாளர் 300 சுவிஸ் பிராங்க் வரை காசு வைத்திருக்கலாம்.


21. வரவு செலவு கணக்குகள்

  1. அனைத்து வருமானங்களும் உரிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

  2. அனைத்து செலவுகளும் பதிவுசெய்யப்பட்டு ஆதாரங்களுடன் சேமிக்கப்பட வேண்டும்.

  3. வரவு செலவு விபரங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட வேண்டும்.

  4. உறுப்பினர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கணக்குகள் வைத்திருக்க வேண்டும்.

  5. ஒரு வார முன் அறிவிப்புடன் உறுப்பினர்கள் கணக்குகளை பார்வையிடலாம்.

  6. கணக்கறிக்கைகள் முதன்மையாக தமிழ் மொழியில் தயாரிக்கப்படும்.

  7. தேவையெனில் பிற நாட்டவர்களுக்கு ஜெர்மன் மொழியில் வழங்கலாம்.


22. சமூக ஊடகம்

  1. இணையதளம் நிர்வாகசபை கண்காணிப்பில் ஊடகப் பொறுப்பாளரால் நிர்வகிக்கப்படும்.

  2. தொழில்நுட்ப நிர்வாகம் வெளிப்புற நபரிடம் ஒப்படைக்கப்படும் போது நிர்வாகசபை அனுமதி பெற வேண்டும்.

  3. வெளியிடப்படும் தகவல்கள் பொதுச்சபை தீர்மானத்தின் அடிப்படையில் இருக்கும்.

  4. சமூக ஊடகங்கள் மூலம் கலாச்சார, கல்வி, சமூக செய்திகள் பகிரப்படும்.

  5. பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் செய்திகள் பகிர்பவர்கள் நீக்கப்படுவர்.


23. பொதுச்சபையிலிருந்து விலகுதல்

  1. மூன்று ஆண்டுகளுக்கு மேல் சந்தா செலுத்தாதவர்கள்.

  2. தன்னிச்சையாக விலகுபவர்கள்.


24. நிர்வாகசபை உறுப்பினர் பதவியிழத்தல்

  1. இரண்டு ஆண்டு காலம் முடிவில் பதவி முடிவடையும்.

  2. விதிமுறைகளை பின்பற்றாதவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

  3. தன்னிச்சையாக விலகுதல்.

  4. அனுமதி இன்றி இரண்டு கூட்டங்களுக்கு வராதல்.

  5. காரணம் ஏற்கப்படாவிட்டால் பதவி நீக்கம்.


25. நிர்வாகசபையிலிருந்து நீக்குதல்

ஒன்றிய வளர்ச்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நிர்வாகசபை தற்காலிகமாக நீக்கலாம். நிரந்தர நீக்கம் பொதுக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


26. பொறுப்புகள் ஒப்படைத்தல்

  1. புதிய நிர்வாகம் தெரிவான பின் அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

  2. இரண்டு வாரங்களில் ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.


27. யாப்பு திருத்தங்கள்

  1. பிரிவு 06 இன் சில விதிகள் மாற்ற முடியாது.

  2. மாற்றங்களுக்கு 60% உறுப்பினர் ஆதரவு தேவை.


28. பொது

  1. பிரேரணைகள் இரண்டு வாரங்களுக்கு முன் எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

  2. நிர்வாகசபை வருடத்திற்கு 4 முறை கூட வேண்டும்.

  3. நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும்.

  4. நிர்வாகசபை அனுமதி இன்றி ஒன்றியத்தின் பெயரில் செயல்பட முடியாது.

  5. நிகழ்வுகள் நிர்வாகசபை தீர்மானப்படி நடைபெறும்.

  6. 1500 பிராங்குக்கு மேற்பட்ட செலவுகளுக்கு நிர்வாக அனுமதி பெற வேண்டும்.


29. முடிவுறுத்தல்

ஒன்றியம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால் பொதுச்சபை கூட்டி ஆலோசனை பெற வேண்டும்.
மூட வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒன்றியத்தின் அனைத்து சொத்துக்களும் சமூக சேவைக்காக வழங்கப்பட வேண்டும்.